Welcome to Sakthi Vikatan
சகலமானவர்களுக்கும்... - வணக்கம் இறைவா!
சுஜாதா
தமிழகத்தில் பௌத்தத்தைவிட ஒரு காலகட்டத்தில் சமணம் (ஜைனம்) அதிகம் பரவியிருந்தது. அதற்கான அடையாளங்கள் இன்றும் சித்தன்னவாசல், நார்த்தா மலை போன்ற பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. கர்நாடகத்தில் உள்ள சிராவணபெலகோளா ஓர் உயரமான உதாரணம். திருநாவுக்கரசர், 60 வயது வரை சமணராக இருந்து பின்னர் சைவத்துக்குத் திரும்பியவராம்.
பௌத்த மதத்தைவிடப் புராதனமானது சமணம். அதன் சரித்திரத்தில் முக்கியமான புருஷர், வர்த்தமான மஹாவீரர். கி.மு. 599லிருந்து 527 வரை வாழ்ந்தவர். அவரை 24&வது ‘தீர்த்தங்கரர்’ என்று சொல்கிறார்கள். தீர்த்தங்கரர் என்றால் வழிகாட்டிகள், பாலங்கள் என்று சொல்லலாம்.
சமணர்களின் தத்துவம்: மனித இனம், பந்தங்களிலிருந்தும் வாழ்க்கை விகாரங்களின் பாதிப்புகளிலிருந்தும் கடுமையான தவம் அல்லது விரதத்தின் மூலம் விடுதலை பெறலாம் என்பது. இந்தத் தவம், பதினான்கு கட்டங்கள் அல்லது குணஸ்தானங்கள் மூலம், படிப்படியாக நம் உண்மையான ஆத்மாவை மறைக்கும் கர்மங்களை நீக்கலாம். சமண மதத்தில் அஹிம்சையும் மற்ற உயிர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டமும் கேடும் விளையா மல் காப்பதும் மிக மிக முக்கியம்.
வர்த்தமானர், புத்தர் காலத்தில் வாழ்ந் தவர். பீகாரில் வைஷாலி என்ற இடத்தில் ஒரு க்ஷத்ரியத் தலைவரின் மகனாகப் பிறந்தார் வர்த்தமானர். பெற்றோரின் கடைசிக் காலம்வரை அவர்களுடன் வாழ்ந்தார். வர்த்தமானர், தன் 28வது வயதில் ஆன்மிகப் பயிற்சியைத் துவக்கினாராம். பன்னிரண்டு வருடம் அலைந்து திரிந்தபின் நிர்வாணமும் கைவல்ய நிலையும் அடைந்தாராம். அவர், ஜீனர் (வெற்றிகண்டவர்) என்று அழைக்கப்பட்டார். அதனால் மகாவீரர் என்றும் பெயர் பெற்றார். தன் ஞானத்தைப் பரப்புவதிலும் இருபத்துமூன்று முன்னவர்கள் சொன்ன சமணக் கருத்துகளைப் பரப்புவதிலும் வாழ்க்கையைக் கடத்தினார். 72&ஆம் வயதில் பீகாரில் பவா என்ற இடத்தில் சமண முறைப்படி பட்டினி கிடந்து இறந்து போனார். இவரைப் பற்றிப் பல கதைகள் உள்ளன.
தற்கால ஜைன மதக் கோட்பாடுகளில் மொழி, இடம் சார்ந்த வேறுபாடுகள் இருந்தாலும் ஆதாரமாக அதன் புராதனக் கோட்பாடுகள் அதிகம் மாறாமல் உள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஜைனர்கள் தற்போதைய குஜராத், ராஜஸ்தான் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தபோது அவர்கள் இரு வகையாகப் பிரிந்தார்கள். உடலில் வஸ்திரம் இல்லாமல் ஒரு குழுவும் உடலில் வெள்ளை வஸ்திரங்கள் அணியும் ஒரு குழுவும் திகம்பரர்கள்& ஸ்வேதம்பரர்கள் என்று பிரிந்தார்கள். இன்றும் இந்தப் பாகுபாடு உள்ளது. இன்று திகம்பரர்கள், பொதுமக்கள் மத்தியில் இருக்கும்போது ஆடை அணிகிறார்கள். இவ்விருவரிடையே மற்றொரு வேறுபாடு, பெண்களைச் சார்ந்தது. திகம்பரர்கள், பெண்களை அனுமதிப்பதில்லை. அவர்களை அனுமதிக்க வேண்டுமானால், அவர்கள் ஆண்களாக மறுபிறவி எடுத்து வர வேண்டுமாம். ஸ்வேதம்பரர்கள் அப்படியில்லை. பெண்களை ஜைனக் கோயில்களில் அனுமதிக்கிறார்கள்.
ஜைனர்கள் உலகில் உள்ள அனைத்தையும் ஜீவ&அஜீவ என்று இரு வகையாகப் பிரிக்கிறார்கள். இதை உயிருள்ள& உயிரற்ற என்பதைவிட, உணர்ந்த & உணர்வற்ற என்பது பொருந்தும். ஷிமீஸீtவீமீஸீt& ழிஷீஸீsமீஸீtவீமீஸீt. எல்லா உயிரும் ஜீவ& அஜீவ கலப்பு. வெறும் ஜீவன்தான் உண்மை நிலை. அதன் மேல் அஜீவ நிலை படும்போது அது கறைபடுகிறது. எப்போது கலந்தது, எத்தனை அஜீவக் கலப்பு என்பதையெல்லாம் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், அஜீவக் கறையை மெள்ள மெள்ள நீக்கலாம் & தவ ஒழுக்கத்தின் மூலம்.
அஹிம்சை, ஜைனர்களுக்கு மிக முக்கியம். மற்ற உயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலும் கூடாது. அதனால் உண்மையான ஜைனர்கள் நடக்கும்போது முன்னால் பாதையை லேசாக பெருக்கிக் கொண்டே செல்வார்கள்.
மூச்சு விடும்போது மூக்கையும் வாயையும் துணி போட்டு மறைப்பதும் இதே காரணத்துக்காகத்தான். சுத்த சைவ உணவு தான். கொல்வதுடன் சம்பந்தப்பட்ட எந்த வியாபாரத்திலும் ஈடுபட மாட்டார்கள். ஜைனத்தில் கடவுள் என்ற உயர்ந்த ஜீவன் எதுவும் சொல்லப்படவில்லை. ஆன்மாதான் ஜீவனின் சாரம். ஜீவன்தான் எல்லாவற்றையும் உணரக் கூடியது. அனைத்தையும் உணர்ந்தபின், முக்தி நிலையையும் அடையக் கூடியது அதுவே. தீர்த்தங்கரர்கள் ஜீவனை மறுபக்கத்துக்குக் கொண்டு செல்லும் பாலங்கள். அப்படி அழைத்துச் சென்று நிர்வாண நிலையை அடைய உதவுபவர்கள் இந்த ஆசிரியர்கள்; வழிகாட்டிகள்.
ஜைனத் துறவற வாழ்வுக்கும் சாதாரண ஜைனர்களின் கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் தொடர்ச்சி உண்டு. துறவி களின் வாழ்க்கைமுறை, அதீதமான ஒருமனமான கட்டுப்பாடு. அதன் 14 குணஸ்தானங்களில் நான்காவதை எய்தினாலே, கர்மத்திலிருந்து விடுபடுகிறார்கள். இதைச் சாதாரண ஜைனர் களும் அடையலாம். ஆறாவது குணஸ்தானம் அடைந்த ஒருவர் ஆரோக்கியமும் மன அமைதியும் பரிசோதிக்கப்பட்டு ஜைனப் பள்ளியில் துறவியாக அனுமதிக்கப்படுகிறார். அதன்பின் கடுமையான கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அதன் அங்கமான சதா படிப்பு, பிறர் தருவதை மட்டும் உண்ணுதல், மதபோதனை, ஊர் ஊராகப் பயணம் செய்வது& இதுதான் அவர்களின் வாழ்க்கை. இப்படிச் செய்து கட்டுப்பாடாக இருந்தும்கூட அவர்களால் ஒரு பிறவியில் கர்ம வினையை முழுவதும் கழற்றிவிட முடியாது. பல பிறவிகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கர்மவினை தீரும். குணஸ்தானங்களில் மெள்ள உயர்ந்து இறுதி விடுதலை கிடைக்கும். ஒரு முதிய ஜைன முனிவர், வர்த்தமானர் செய்ததுபோல சோறு, நீர் இல்லாமல் உபவாசமிருந்து சாகத் தீர்மானிக்கலாம்.
இந்த ஆதாரக் கருத்துகளிலிருந்து புறப்பட்டாலும் நவீன சமணம் சிக்கலான தத்துவக் கருத்து களாக விரிந்துள்ளது. அவற்றை எளிமைப்படுத்திச் சொல்கிறேன். அறிவு என்பது நமக்குப் புலனறிவு (மதி), உணர்தல் (அவதி), வார்த்தைகள் மூலம் அறிவது (ச்ருதி), மற்றவர் சிந்தனை மூலம் அறிவது (மன பூர்யாய).
இவை அனைத்தும் கடந்த உண்மை அறிவு, கைவல்யம். இது வர்த்தமானர் அடைந்தது. இந்த அறிவுதான் புலன்களுக்கு அப்பாற்பட்ட, சந்தேகமற்ற, கால தூரக் கட்டுப்பாடுகளற்ற, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நேரடி ஞானம். ஞாபகம், தர்க்கம் ஆகியவற்றால் பெறும் அறிவு மறைமுகமானது. புத்தகங்களிலிருந்து பெறும் அறிவு மூன்றாவது. கைவல்யம் எல்லாருக் கும் கிடைக்காது. பிரமாணம் என்பது ஒரு பொருளின் தனிப்பட்ட உண்மை. நயம் என்பது அப்பொருளின் சூழலோடு தொடர்புள்ள உண்மை. ஜைனர்கள் இவ்வகையில் உண்மையை அறிய முயற்சிக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் உள்ள அறுபது லட்சம் ஜைனர்களில், சுமார் முப்பது லட்சம் பேர் இந்தியாவில் _ குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவெனினும் இந்தியப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கு கணிசமானது. ஜைன மதத்தின் அஹிம்சைக் கருத்துகளும் பிறர்க்கு உதவும் நல்ல தத்துவங்களும் நவீன நாகரிகத்தின் பாதிப்பால் பழுதுபடாமல் பாதுகாக்க வேண்டியது சிரமமான காரியமே.
சமண மதம்
- ஆறாம்திணை
ஜைன வர்த்தமான மகாவீரரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் சமண சமயம் ஆரம்பிக்கப்பட்டது. பிராமணியத்திற்கும் உயிர்க் கொலைக்கும் எதிரான கடும்கோட்பாடுகள் கொண்ட சமயம். பிராமணர், வைஷ்யர், சத்திரியர், சூத்திரர் என நான்கு வர்ண பேதத்தவராக சமூக மக்களைப் பிரிப்பதை சமண சமயம் மறுக்கும்.
மகாவீரர் (கி.மு. 599-527) சிறு மன்னரான சத்திரிய குலத்தில் பிறந்தவர். கெளதம புத்தர் காலத்திலே வாழ்ந்தவர். மறுபிறப்பு, தொடர்ந்த பிறவித்துன்பம் (நோய், முதுமை, மரணம்) இவற்றின் மீட்சியாக 'நிர்வாணம்' (மோட்சம்) அடைதல் என்ற கொள்கை கொண்டது.
சமணசமயம் உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை, வாய்மை, பற்றுப்பாசம் துறத்தல் ஆகியவற்றில் கடும்கோட்பாடு கொண்டது. ஊழ்வினை, தலைவிதி, நியதிக் கொள்கைகளை சமண சமயமே முதலில் போதித்தது என்பர்.
சீவம் உயிருள்ளவை எனவும் அசீவம் உயிரற்ற பொருட்கள் எனவும் சமண சமயம் கூறும். பொருள் அநாதியானது என்பதுடன் கடவுள் பற்றி எதுவும் இச்சமயம் கூறவில்லை. ஆத்மா என்பது வாழ்க்கை. எல்லையற்றது; மதிப்பானது. உயிரற்ற பொருள் துன்பம் தருவம். ஆத்மாவை பொருளிலிருந்து விடுவிப்பதுவே மோட்சம் ஆகும்.
மகாவீரர், ஆதிபகவன், தீர்த்தங்காரரை சமண சமயத்தவர் வழிபடுவர். விக்கிரக வழிபாட்டை ஏற்பர்.
சமண மதகுருமார் திருவோடு சுமந்து யாசகம் செய்து வாழ்வர்.
ஊர்வன உட்பட எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்பதில் கடுங்கோட்பாடு கொண்டது சமண சமயம். அகிம்சைக் கோட்பாட்டை முதன்முதலாக முன்வைத்தது. புத்த சமயமும் அதே காலத்தில் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடித்தது. மகாத்மா காந்தி இவ்விருவரும் காட்டிய அகிம்சைக் கோட்பாட்டையே அரசியலிலும் கடைப்பிடித்து வெற்றி பெற்றார்.
சமணம், புத்தம் இரண்டு சமயங்களிடையேயும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆயினும் சமணம், புத்தம் போலப் பரவாது இந்தியாவில் மட்டுமே இன்று நிலைபெற்றுள்ளது. ஆயினும் கிழக்காபிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் சிறு தொகை சமண சமயத்தவர் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகவே தொழில் புரிவர். இந்தியாவில் இன்று 30 லட்சம் சமண சமயத்தவர் வசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பக்தி காலகட்டம் ஆரம்பித்த 7 ஆம் நூற்றாண்டு வரை சமண சமயமே ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் சித்தாந்த ரீதியில் இன்றும் சமணர்கால அறநெறிகள், இலக்கியங்கள், தமிழர் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தமிழ்மொழியில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற நீதி நூல்களும் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான ஐம்பெருங்காப்பியங்கள் யாவும் இன்றும் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளன.
சமண சமயத்திலும் இரு பிரிவுகள் உள்ளன. சுவெதம்பரர், திகம்பரர், சுவெதம்பரர் வெள்ளைஉடை அணியும் துறவியர். திகம்பரர் இயற்கையோடு வாழ்பவர். உடை அணிவதையும் விரும்பார். பெண்களின் கவர்ச்சி சமய சிந்தனையைக் குலைத்து விடும் என திகம்பரர், பெண்களை தமது அணியில் சேர்க்க மாட்டார். சுவெத்ம்பரரில் பெண்களையும் சமயத்தில் சேர்ப்பதாலும் மகாவீரர் போதனைகளை நடைமுறைக்கேற்ப விளக்குவதாலும் பிரபல்யம் அடைந்துள்ளனர்.
சமண சமயத்தவர் உயிர்க்கொலைக்கு எதிரானவராயிப்பதால் இராணுவம், இறைச்சி மீன் விற்பனை, தோல்தொழில் ஆகியவற்றை மட்டுமல்ல விவசாயத்தில் உழும்போது பூச்சி, புழுக்களைக் கொல்ல நேரும் என இத்தொழிலிலும் ஈடுபடமாட்டார்.. பெரும்பாலும் வணிகர்களாகவே வாழ்வர். வணிகத்திலும் நேர்மை, ஒழுக்கம் வாய்மை கடைப்பிடிப்பதால், நாணயம். மதிப்பால் உயர்ந்து ஏராளமானவர் செல்வந்தராக வாழ்கின்றனர்.
மகாவீரர் ஜெயந்தி விடுமுறை நாளாக ஆண்டுதோறும் இந்தியா எங்கும் கொண்டாடப்படும். அத்துடன் பூரணை நாட்களூம் வழிபாட்டு நாட்களாகும்.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
- திருக்குறள் (323)
Wednesday, August 31, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment