அரசு பதில்கள்சக்திகுமார், வில்லியனூர்.
இந்தி, ஆங்கில எழுத்துக்களைத் தார்பூசி அழிப்பதால் மட்டுமே தமிழ் மொழி வளர்ந்து விடுமா?
ச.தமிழ்ச் செல்வன் ‘இருளும் ஒளியும்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அறிவொளி இயக்கத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்ததால் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறார். ‘‘தபால் ஆபிசில் உள்ள இந்தி எழுத்தை அழிக்க தார்ச்சட்டியோடு வந்தார்கள். கீழே நின்று கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்க, தார்ச்சட்டியோடு மேலே ஏறியவர் கீழே பார்த்துக் கேட்டார். ‘ஏண்ணே... இதுல எது இந்தி எழுத்து?’’ ‘தார்ப்பூசி அழிப்பது வெறும் எதிர்ப்புணர்வுதான். ஆக்கபூர்வமான வேலை தமிழறிவை, எழுதப்படிக்கத் தெரியும் கல்வியறிவை வளர்ப்பதுதான்’ என்பதை யோசிக்க வைத்த வரிகள். அரசியல்வாதிகளுக்குத் தேவை பப்ளிசிட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு அல்ல.
சுஜாதா பதில்கள்
உங்கள் அப்பா அரசுப்பணியின் இன்ஜினீயர் வேலை செய்திருக்கிறார். எனினும் பையன் கேட்ட ஒரு நல்ல சைக்கிளை வாங்கிக் கொடுக்க முடியாத சூழல். அந்தக் காலகட்டத்தில் லஞ்சம் வாங்க முடியாதா? சம்பளம் போதுமானதாக இல்லையா? அன்றைய வாழ்க்கை முறையைக் கொஞ்சம் சொல்லுங்களேன். (படிக்கும்போதெல்லாம் கண்கள் கலங்கிய நிகழ்வு அது)
_பி. ஸ்தனிஸ்லாஸ், வேளாங்கண்ணி.
லஞ்சம் வாங்காத அப்பா(வி)கள் இன்னும் உலகில் நிறையப் பேர் இருக்கிறார்கள். என்ன கஷ்டம் என்றால், அவர்களை வைத்துக்கொண்டு சினிமா எடுக்க முடியாது
திரைப்படங்கள் அனைத்துமே ஒன்று என்கிற போது அதில் என்ன கலைப்படம், வணிகப்படம் என்று வேறுபாடு? இந்த வேறுபாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
_ தி.க.மா. சந்திரமோகன், கும்பகோணம்.
குறைந்த செலவில் எடுத்து, போட்ட பணத்தைத் திரும்பப் பெறவே சிங்கியடிக்கும் படங்கள் ஒரு வகை. இவைகளை கலைப்படம் என்று சொல்லி, ஏதாவது ஒரு பாஷை தெரியாத தேசத்தில் நடக்கும் விழாவில் சப்டைட்டில் போட்டு நாற்பது பேர் பார்த்து ஒரு அவார்டு பெற்று அதை வைத்துக் கொண்டு ஊரூராகப் பெட்டியை அனுப்பி திணறும் படங்கள். தப்புப் பண்ணாத 5 சாங், 3 ஃபைட், லேடிஸ் சென்டிமெண்ட் வகை மற்றது. இந்த வகையிலும் 100_க்கு 95 படங்கள் வெற்றி பெறுவதில்லை. மற்ற ஐந்து இடத்துக்குத்தான் இத்தனை போட்டி.
உங்களின் கடவுள் பக்தி பற்றி எங்கேயும் தெளிவாகக் கூறாமல் நாமம் போடுகிறீர்களே... முதலில் நம்பி, பிறகு நம்பாமல் விட்டீர்களா? முதலில் நம்பாமல் இருந்து பிறகு நம்பினீர்களா? நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருக்கிறீர்களா?
_நா.பத்மா, ஜோலார்பேட்டை.
மூன்றாவது.
No comments:
Post a Comment